< Back
கிரிக்கெட்
டிராவிஸ் ஹெட் விக்கெட்டை விரைவில் வீழ்த்த இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் அட்வைஸ்
கிரிக்கெட்

டிராவிஸ் ஹெட் விக்கெட்டை விரைவில் வீழ்த்த இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் அட்வைஸ்

தினத்தந்தி
|
22 Dec 2024 6:28 PM IST

நடப்பு பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் டிராவிஸ் ஹெட் இதுவரை 2 சதங்கள் அடித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் டிராவிஸ் ஹெட்டின் பேட்டிங் இந்திய அணிக்கு தலைவலியாக உள்ளது. அவர் 3 போட்டிகளின் முடிவில் 2 சதங்கள் உட்பட 409 ரன்கள் குவித்துள்ளார். இந்த தொடர் மட்டுமின்றி 2023-ல் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்து ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்நிலையில் 4வது போட்டியில் அவரின் விக்கெட்டை விரைவில் வீழ்த்த இந்திய அணிக்கு முன்னாள் வீரர்களான சஞ்சய் பங்கர் மற்றும் புஜாரா சில ஆலோசனைகளை கொடுத்துள்ளனர்.

புஜாரா வழங்கிய ஆலோசனை பின்வருமாறு:- "லைன் மிகவும் முக்கியம். அவருக்கு எதிராக மிடில் ஆப் ஸ்டம்ப் பகுதியில் பந்து வீசுங்கள். அரவுண்ட் தி விக்கெட் திசையில் பந்து வீசினாலும் உங்கள் லைன் எப்போதும் மிடில் ஆப் ஸ்டம்ப் திசையில் இருக்க வேண்டும். ஏனெனில் அந்த லைனில் ஹெட் அசவுகரியமாக தெரிகிறார். ஏற்கனவே அவர் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக தடுமாறுகிறார்.

அந்தப் பந்துகளிலும் அவர் ரன்கள் அடிக்கிறார். அதனால் நீங்கள் அனைத்து பந்துகளையும் அப்படி வீசக்கூடாது. சில நேரங்களில் அந்தப் பந்துகளை வீசி பெரும்பாலும் நீங்கள் ஸ்டம்ப்புகளை குறி வைக்க வேண்டும். இதை செய்தால் அவருடைய விக்கெட்டை பெறுவதற்கு அதிக வாய்ப்பு கிடைக்கும்" என்று கூறினார்.

இது குறித்து சஞ்சய் பங்கர் கொடுத்த ஆலோசனை பின்வருமாறு:- "ஆட்டத்தின் ஆரம்பத்தில் அவருக்கு எதிராக அரவுண்ட் விக்கெட் திசையில் பந்து வீசுங்கள். அது வெற்றிகரமாக இருந்தால் முதல் 10 - 15 பந்துகளுக்கு அதையே தொடருங்கள். இல்லையெனில் தேர்ட் மேன் திசையில் பீல்டர்களை நிறுத்தி ஓவர் தி விக்கெட் திசையில் வீசுங்கள்.

மேலும் மிடில் ஸ்டம்ப் லைனில் பந்து வீசி அவரை கொஞ்சம் வித்தியாசமாக விளையாட வையுங்கள். ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக அவர் தனது பேட்டை சுழற்றுவார் என்பதால் தேர்ட் மேன், டீப் பைன் லெக் பகுதிகளில் பீல்டரை நிறுத்துங்கள். இது ஹெட் ரன்கள் அடிக்கும் வேகத்தை குறைத்து அழுத்தத்தை உண்டாக்கி விக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்