என்னை பொறுத்தவரை அவர் உலகின் 8-வது அதிசயம் - விராட் கோலி பாராட்டு
|இறுதிப்போட்டியில் பும்ராதான் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு வழிவகுத்ததாக விராட் கோலி பாராட்டியுள்ளார்.
மும்பை,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகள் கழித்து இந்தியா கோப்பையை வென்றதை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்ற நட்சத்திர வீரர் விராட் கோலி பேசுகையில், பும்ராவை பாராட்டி பேசினார்.
அவர் பேசியது பின்வருமாறு:- 'இந்த வரவேற்பை வாழ்வில் ஒரு போதும் மறக்கமாட்டேன். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஒரு தலைமுறை பவுலர். இறுதி ஆட்டத்தில் அவர் தான் ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பி வெற்றிக்கு வழிவகுத்தார். என்னை பொறுத்தவரை அவர் உலகின் 8-வதுஅதிசயம்.
2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை நாம் வென்ற போது மூத்த வீரர்கள் நெகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்டனர். அப்போது இளம் வயது என்பதால் நான் அதிகமாக உணர்ச்சிவசப்படவில்லை. ஆனால் இப்போது மூத்த வீரர் என்பதால் நானும் அதே உணர்வுக்குள்ளாகி கண்ணீர் விட்டேன். இதே போல் கடந்த 15 ஆண்டுகளில் ரோகித் சர்மா இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டதை பார்த்ததில்லை. இருவரும் ஆனந்த கண்ணீரோடு கட்டித்தழுவி வெற்றி மகிழ்ச்சியை பகிர்ந்தோம்' என்றார்.