முதல் டெஸ்ட் : இந்திய அணியில் இடம் பெறப்போவது அஸ்வினா ? ஜடேஜாவா ?
|பார்டர்-கவாஸ்கர் தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.
பெர்த்,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த முறை பார்டர் கவாஸ்கர் தொடரில் சிறப்பாக விளையாடிய புஜாரா இல்லாமல் இந்த முறை இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்த நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் அல்லது ஜடேஜா ஆகியோரில் ஒருவர் மட்டுமே இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.
பெர்த் மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஒரு சுழற்பந்துவீச்சாளரை மட்டும் களமிறக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது .அதன்படி இந்த போட்டியில் அஸ்வின் களமிறக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..
ஆஸ்திரேலிய அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பதாலும் , முந்தைய டெஸ்ட் போட்டிகளில் இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை அஸ்வின் அதிகமாக வீழ்த்தி இருப்பதாலும் அவரை தேர்வு செய்ய இந்திய அணி திட்டமிட்டுள்ளது.