முதல் டெஸ்ட்: வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்
|இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஜஸ்டின் க்ரீவ்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
ஆண்டிகுவா,
வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி ஆண்டிகுவாவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 450 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜஸ்டின் க்ரீவ்ஸ் 115 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய வங்காளதேசம் 9 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்களில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜேக்கர் அலி 53 ரன்கள் அடித்தார்.
பின்னர் 181 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 152 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அலிக் அதானேஸ் 42 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக தஸ்கின் அகமது 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதனையடுத்து 334 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேசம் 132 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக மெஹிதி ஹசன் மிராஸ் 45 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெம்ர் ரோச் மற்றும் ஜெய்டன் சியல்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஜஸ்டின் க்ரீவ்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.