முதலாவது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே
|இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக சிக்கந்தர் ராசா தேர்வு செய்யப்பட்டார்.
புலவாயோ,
ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஒரளவு சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. கும்பி 15 ரன்களிலும், மருமணி 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் சிக்கந்தர் ராசா (39 ரன்கள்), நகர்வா (48 ரன்கள்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வெறும் 40.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே 205 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக பைசல் அக்ரம் மற்றும் ஆகா சல்மான் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் உள்ளூர் சாதகத்தை கச்சிதமாக பயன்படுத்தி கொண்ட ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.
தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சைம் அயூப் 11 ரன்களிலும், அப்துல்லா ஷபீக் 1 ரன்னிலும் முசரபானி பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கம்ரான் குலாம் 17 ரன்களிலும், ஆகா சல்மான் 4 ரன்களிலும், ஹசீபுல்லா டக் அவுட்டிலும் வீழ்ந்தனர்.
பாகிஸ்தான் 21 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. ரிஸ்வான் 19 ரன்களுடனும், ஆமீர் ஜமால் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர். ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி, சிக்கந்தர் ராசா மற்றும் சீன் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர்.
மழை நின்றவுடன் ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்தது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் ஆட்டத்தை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டக்வொர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது.
அதில் ஜிம்பாப்வே அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஒருநாள் தொடரை பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து ஜிம்பாப்வே வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக சிக்கந்தர் ராசா தேர்வு செய்யப்பட்டார்.