< Back
கிரிக்கெட்
முதலாவது ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

image courtesy: twitter/@ICC

கிரிக்கெட்

முதலாவது ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

தினத்தந்தி
|
1 Nov 2024 11:37 AM IST

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

ஆண்டிகுவா,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ஆண்டிகுவாவில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றிய அசத்திய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் இங்கிலாந்து அணியை 45.1 ஓவர்களில் 209 ரன்களுக்குள் ஆல் அவுட்டாக்கி அசத்தினர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் லிவிங்ஸ்டன் 48 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. இங்கிலாந்து பந்துவீச்சை எந்தவித சிரமமுன்றி எதிர்கொண்ட எவின் லூயிஸ் - பிரண்டன் கிங் விரைவாக ரன்களை சேர்த்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. ஆட்டம் நீண்ட நேரம் தடைபட்டதால் டக்வொர்த் முறைப்படி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 35 ஓவர்களில் 157 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. மழை நின்றவுடன் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது.

தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரண்டன் கிங் நிதானமாக விளையாட, மறுமுனையில் லூயிஸ் அதிரடியில் வெளுத்து வாங்கினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்கள் சேர்த்த நிலையில், கிங் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லூயிஸ் இலக்கை நெருங்கும் வேளையில் 94 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

முடிவில் வெஸ்ட் இண்டீஸ் வெறும் 25.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 157 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

மேலும் செய்திகள்