முதல் ஒருநாள் போட்டி : நியூசிலாந்து அணியை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி
|இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
தம்புல்லா,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது.
இலங்கை - நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தம்புல்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் பதும் நிசாங்கா 12 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து அவிஷ்கா பெர்ணாண்டோ களம் இறங்கினார். குசல் மெண்டிஸ்-பெர்ணாண்டோ இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இந்த இணையை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். நிதானமாக ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இதில் பெர்ணாண்டோ 100 ரன்னிலும், குசல் மெண்டிஸ் 143 ரன்னிலும் அவுட் ஆகினர்.
தொடர்ந்து களம் இறங்கிய சதீரா சமரவிக்ரமா 5 ரன்னிலும், அசலங்கா 40 ரன்னிலும் அவுட் ஆகினர். இலங்கை அணி 49.2 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. இதன் காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இறுதியில் இலங்கையின் இன்னிங்ஸ் அத்துடன் முடிக்கப்பட்டது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 143 ரன்னும், அவிஷ்கா பெர்ணாண்டோ 100 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து டி. எல்.எஸ் முறைப்படி நியூசிலாந்து அணிக்கு 27 ஓவர்களில் 221 ரன்கள் அடிக்க வேண்டும் என வெற்றி இலக்கு மாற்றி அமைக்கபப்ட்டது. தொடர்ந்து நியூசிலாந்து அணி தனது இன்னிங்சை விளையாடியது .
தொடக்கம் முதல் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் . இதனால் நியூசிலாந்து அணி 27 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது . அதிகபட்சமாக வில் யங் 48 ரன்கள் எடுத்தார் . இதனால் 45 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது . இந்த வெற்றியால் ஒருநாள் தொடரில் 1-0 என இலங்கை முன்னிலை வகிக்கிறது .