டி20 உலகக்கோப்பையை வெல்ல காரணமான என்னை அனைவரும் மறந்து விட்டனர் - கங்குலி ஆதங்கம்
|விராட் கோலிக்கு பின் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தபோது பலரும் தம்மை விமர்சித்ததாக கங்குலி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி இந்தியா வரலாறு படைத்திருக்கிறது.
இதற்கு முன் ரோகித் கேப்டன் ஆனதிலிருந்து இந்திய அணி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஆகியவற்றில் தோல்வி அடைந்து இருந்தது. இருப்பினும் மனம் தளராமல் 2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை சரியாக வழி நடத்தி ரோகித் வெற்றி பெற வைத்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலிக்கு பின் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தபோது பலரும் தம்மை விமர்சித்ததாக முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது தம்முடைய முடிவின் காரணமாக ரோகித் சர்மா தலைமையில் இந்தியா கோப்பையை வென்ற பின் அனைவரும் தம்மை மறந்து விட்டதாக கங்குலி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "கேப்டன்ஷிப் பொறுப்பை ரோகித் சர்மாவின் கையில் ஒப்படைத்தபோது நான் விமர்சிக்கப்பட்டேன். ஆனால் தற்போது அவருடைய தலைமையில் நாம் உலகக்கோப்பையை வென்றுள்ளோம். தற்போது என்னை யாரும் திட்டவில்லை. ஆனால் ரோகித் சர்மாவை நான் கேப்டனாக நியமித்தேன் என்பதை அனைவரும் மறந்து விட்டனர்" என்று கூறினார்.
முன்னதாக 2021-ல் விராட் கோலி கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்ய கங்குலி முக்கிய காரணமாக இருந்ததாக ரசிகர்கள் விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.