விராட் கோலியிடம் இருந்து அந்த விஷயத்தை அனைவரும் கற்றுக்கொள்ளலாம் - ரிங்கு சிங்
|விராட் கோலியுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பை பெற்றது கனவு நிஜமான தருணம் என்று ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய வீரர் விராட் கோலி தற்சமயத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படுகிறார். இந்தியாவுக்காக கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் பெரும்பாலான போட்டிகளில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் 26,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.
அந்த வகையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள விராட் கோலி பிட்னஸ் எனும் வார்த்தைக்கு அடையாளமாகவும் திகழ்கிறார். அதனால் அவர் ஏராளமான இளம் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார்.
முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரில் இளம் இந்திய வீரர் ரிங்கு சிங் கோரிக்கையை ஏற்று விராட் கோலி தம்முடைய ஒரு பேட்டை பரிசாக கொடுத்தார். ஆனால் அதைப் பயன்படுத்தி வலைப்பயிற்சியில் அதிரடியாக விளையாட முயற்சித்த ரிங்கு சிங் அடுத்த ஒரு வாரத்திற்குள் உடைத்து விட்டார். அதனால் விராட் கோலி மீண்டும் அவருக்கு புதிய பேட் ஒன்றை வழங்கினார்.
இந்நிலையில் விராட் கோலியிடம் உங்களுடைய பேட் உடைந்து விட்டதாக சொன்னபோது மிகவும் பயந்ததாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலியை பார்த்து உலகின் அனைத்து வீரர்களுமே பிட்னஸை கற்றுக் கொள்ளலாம் என ரிங்கு பாராட்டியுள்ளார். அத்துடன் விராட் கோலியுடன் இணைந்து இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றது கனவு நிஜமான தருணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"விராட் கோலி சீனியர் என்பதால் அவரை அணுகுவதற்கு நான் கொஞ்சம் பயந்தேன். அவரிடம் உடைந்த பேட்டை காண்பிக்க மட்டுமே நான் சென்றேன். அவரிடமிருந்து மீண்டும் எனக்கு புதிய பேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நீங்கள் கொடுத்த பேட் வலைப்பயிற்சியில் உடைந்து விட்டதாக அவரிடம் கூறினேன். பெங்களூருவில் அவர் எனக்கு முதல் பேட்டை கொடுத்தார். அதை வலைப்பயிற்சியில் பயன்படுத்தி பெரிய ஷாட் அடிக்க முயற்சித்ததால் உடைந்தது. எனவே மீண்டும் அவரிடம் நான் பேட்டை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவராகவே மீண்டும் எனக்கு பேட் கொடுத்தார்.
விராட் கோலி பிட்னஸ் அளவில் நம்பர் ஒன் என்பதை அனைவரும் அறிவோம். ஒவ்வொருவரும் எப்படி பிட்டாக இருக்க வேண்டும் என்பதை அவரிடம் இருந்து உத்வேகமாக எடுத்துக்கொண்டு கற்றுக் கொள்ளலாம். எனவே அவரைப் பார்த்து நான் டயட் மற்றும் பயிற்சியை பின்பற்றுகிறேன். இந்த வருடம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நாங்கள் சேர்ந்து விளையாடினோம். அவருடன் பேட்டிங் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என்றாலும் விராட் கோலியுடன் விளையாடுவது அனைவரது கனவாக இருக்கும்" என்று கூறினார்.