ரன் குவிக்கவில்லை என்றாலும் அவர் எப்போதும் சவால் அளிக்க கூடியவர் - இந்திய வீரருக்கு கம்மின்ஸ் பாராட்டு
|விராட் கோலி ஆஸ்திரேலியாவில் விளையாடியது இதுவே கடைசி என்று தெரிந்தால் தாம் வருத்தமடைவேன் என்று கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 10 வருடங்களுக்குப்பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கைபப்ற்றி அசத்தியுள்ளது.
இந்தியாவின் இந்த தோல்விக்கு விராட் கோலியும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் முதல் போட்டியில் சதமடித்த அவர், அதற்கடுத்த போட்டிகளில் தொடர்ந்து அவுட் சைடு ஆப் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் அவர் மீது இந்திய ரசிகர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். மேலும் ஆஸ்திரேலியாவில் இதுதான் அவருக்கு கடைசி டெஸ்ட் என்றும் பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் விளையாடியது இதுவே கடைசி என்று தெரிந்தால் அதற்காக தாம் வருத்தமடைவேன் என்று கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் விராட் கோலி எப்போதுமே களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு சவாலை அளிக்க கூடியவர் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அவருடன் அற்புதமான போட்டி இருந்தது. ரன்களை தாண்டி அவர் போட்டியில் எப்போது சவாலை அளிக்க கூடிய வீரர். அது எதிரணியாக உங்களுக்கு கடினமாக அமைம். அது அவருடைய திட்டங்களில் இருக்கும் என்று உறுதியாக எனக்கு தெரியும். விராட் கோலியுடன் மகிழ்ச்சியாக விளையாடினேன். அவர் கடந்த தசாப்தம் முதலே நட்சத்திர பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார் என்பது உங்களுக்கு தெரியும். அவருடைய விக்கெட்டை எடுத்தால் உங்களால் விரைவில் போட்டியை வெல்ல முடியும் என்பதும் உங்களுக்கு தெரியும். எனவே இதுதான் அவருடைய கடைசி ஆஸ்திரேலிய தொடராக இருந்தால் நான் வருத்தமடைவேன்" என்று கூறினார்.