டான் பிராட்மேன் கூட அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் - பிரித்வி ஷாவுக்கு கிரேக் சேப்பல் கடிதம்
|கிரேக் சேப்பல் பிரித்வி ஷாவுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
சிட்னி,
இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியை வழிநடத்தி ஐ.சி.சி கோப்பை வென்று கொடுத்தவர். அதன் காரணமாக வெகு விரைவிலேயே 2018-ஆம் ஆண்டே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.
முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் அசர வைத்தார். இதன் காரணமாக பெரிய வீரராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அடுத்தடுத்து சறுக்கலை சந்தித்து காணாமல் போனார். தற்போது ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணியில் இருந்தும் உடல் தகுதி மற்றும் ஒழுங்கீனம் காரணமாக கழற்றிவிடப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஆஸ்திரேலியா ஜாம்பவனுமான கிரேக் சேப்பல் பிரித்வி ஷாவுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில், "ஹாய்! ப்ரீத்வி தற்போது உங்கள் வாழ்க்கையில் மிகவும் கடினமான கட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதன் மூலம் கண்டிப்பாக நீங்கள் விரக்தியில் இருப்பீர்கள்.
அடுத்தது என்ன என்று தெரியாமல் நீங்கள் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகள்தான் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் திருப்புமுனையாக இருக்கும். இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையையும் தங்களுடைய குணத்தையும் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்
நீங்கள் யு19 கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய போது உங்களுடைய திறமையை நான் பார்த்து இருக்கிறேன். உங்களுடைய காலகட்டத்தில் சிறந்த இளம் கிரிக்கெட் வீரராக நீங்கள் தெரிந்தீர்கள். உங்களுடைய திறமையை அறிந்தே பலரும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை கவனித்து வருகின்றோம்.
நிச்சயம் உங்களுடைய சிறந்த நாட்கள் இன்னும் வரவிருக்கின்றது. ஒவ்வொரு விளையாட்டு வீரர் வாழ்க்கையிலும் பின்னடைவு என்பது நிச்சயம் இருக்கும். அதை முதலில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு இது போன்ற ஒரு அனுபவம் நடந்திருக்கிறது. பிராட்மேன் அணியிலிருந்து நீக்கப்பட்டு பின் கடுமையாக போராடி அணிக்கு மீண்டும் வந்தார்.
சவால்களை சந்திக்காமல் விலகி செல்வதை விட அதனை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நாம் சிறந்த வீரராக வருவோமா? இல்லையா என்பது அமையும். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையிலே நான் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றேன். அதுதான் என்னுடைய வாழ்க்கையை மாற்றியது. இதன் மூலம் என்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்த ஒரு வாய்ப்பாக அமைந்தது.
கிரிக்கெட்டை எப்படி எதிர்கொள்வது? சரிவிலிருந்து மீள்வது திறனை வளர்த்துக் கொள்ள ஆர்வம் காட்டுவது போன்ற விஷயங்கள் திறமையை விட மிகவும் முக்கியம் என்பதை நான் புரிந்து கொண்டேன். நமது திறமை மீது நாமே சந்தேகம் கொள்வது, கவனத்தை சிதறடிப்பது போன்ற பிரச்சனைகள் எனக்கு இருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். இது எல்லாம் மாற வேண்டும் என்றால் என் வாழ்க்கையில் நான் முழு பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.
எனக்கு நானே தீர்மானித்துக் கொண்டேன். என்னுடைய திறமையை மட்டும் வளர்த்துக் கொள்ள நான் பயிற்சி செய்யவில்லை. என்னுடைய மனதையும்,பயிற்சியில் நான் சரியாக செயல்பட்டேனா என்பதை நானே எடை போட்டுக் கொள்வதற்கான வழியையும் கண்டுபிடித்தேன்.
கடந்த காலத்தில் நடந்த விஷயம் நம் யார் என்று தீர்மானிக்காது. ஆனால் அதிலிருந்து நாம் எப்படி மீண்டு வந்து என்ன செய்தோம் என்பதுதான் நம்மை யார் என்று உணர்த்தும். நீங்கள் இன்னும் இளம் வீரராக இருக்கிறீர்கள். இன்னும் நீங்கள் பல ஆண்டு கிரிக்கெட் விளையாட போகிறீர்கள். எனவே நீங்கள் எந்த மாதிரியான கிரிக்கெட் வீரராகவும் எந்த மாதிரியான மனிதராக இருக்க வேண்டும் என்பதை நீங்களே முதலில் தீர்மானித்து அடிக்கடி எண்ண ஓட்டத்தில் நினைத்துப் பாருங்கள்.
உங்களை எப்போதுமே உத்வேகப்படுத்தும் நபர்களுடன் நீங்கள் இருங்கள். உங்களுடைய உடல் தகுதியை பார்த்துக் கொள்ளுங்கள். சரியான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உடல் வலுவை அதிகரியுங்கள். உங்களுக்கு என்ன தேவையோ அதில் கவனம் செலுத்துங்கள். இந்திய அணிக்கான கதவு எப்போதுமே திறந்திருக்கும். ஆனால் அங்கு செல்ல வேண்டும் என்பதற்கான முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும். மாறுவதற்கும் வளர்வதற்கும் நீங்களே உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் மீது நானும் பலரும் நம்பிக்கை வைத்திருக்கிறோம். நீங்கள் மீண்டும் கிரிக்கெட்டின் உச்சத்துக்கு செல்ல வேண்டும் அதற்கான உதவிகள் எதுவாக இருந்தாலும் நான் செய்ய காத்துக் கொண்டிருக்கின்றேன். கிரிக்கெட் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் என்னிடம் கேட்க தயக்கம் காட்ட வேண்டாம். முழு திறமையை அடைய வேண்டிய அனைத்து குணங்களும் உங்களிடமே இருக்கின்றது. மீண்டும் வாருங்கள் உங்களுடைய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் அன்புடன் கிரேக்" என்று எழுதியுள்ளார்.