கிளப் வீரர்கள் கூட இதை விட நன்றாக விளையாடுவார்கள் - பாக். அணியை விமர்சிக்கும் முன்னாள் வீரர்
|வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் மோசமான தோல்வியை தழுவியது.
ராவல்பிண்டி,
பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்களும், வங்காளதேச அணி 565 ரன்களும் குவித்தன.
117 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி வங்காளதேச வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 146 ரன்களில் சுருண்டது. இதனால் வங்காளதேச அணிக்கு 30 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து எளிதான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 6.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேச அணி, பாகிஸ்தானை முதல்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான ஆட்டத்தை விமர்சித்து பேசியுள்ள அந்த அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் கூறுகையில், "ரிஸ்வான் மட்டும் 2-வது இன்னிங்சில் 50 ரன்கள் அடிக்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை தழுவியிருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நமது அணியில் உள்ள எந்த வீரர்களும் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. முதலில் ஜிம்பாப்வே அணியிடம் தோற்றீர்கள், அதுமட்டுமில்லாமல் ஆசிய கோப்பை தொடரிலும் தோற்றீர்கள், டி20 உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டீர்கள் தற்போது வங்காளதேச அணியிடம் தோற்று இருக்கிறீர்கள்.
இப்படி தொடர்ச்சியான தோல்வியை அளித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறீர்கள். வங்கதேச அணிக்கு இது கடினமான நேரமாக இருந்தாலும் அந்த அணி மிகச்சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் நமது பாகிஸ்தான் வீரர்கள் கிளப் கிரிக்கெட் வீரர்களை விட மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கின்றனர். கிளப் வீரர்கள் கூட பாகிஸ்தான் வீரர்களை விட சிறப்பாக ஆடியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. இந்த தோல்வி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று இது மிகவும் மோசமான ஆட்டம்" என்று கூறினார்.