< Back
கிரிக்கெட்
ஒரு பாக்.வீரர் நினைத்தால் கூட நம்மை வீழ்த்த முடியும் - இந்திய அணிக்கு யுவராஜ் எச்சரிக்கை
கிரிக்கெட்

ஒரு பாக்.வீரர் நினைத்தால் கூட நம்மை வீழ்த்த முடியும் - இந்திய அணிக்கு யுவராஜ் எச்சரிக்கை

தினத்தந்தி
|
22 Feb 2025 9:39 AM IST

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

மும்பை,

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியான நிலையில் விளையாட உள்ளது. இந்திய அணி வெற்றி பெற்றால் ஏறக்குறைய அரையிறுதிக்கு செல்வது உறுதியாகி விடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஒரு பாகிஸ்தான் வீரர் நினைத்தால் கூட இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "போட்டி துபாயில் நடைபெறுவதால் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதில் முன்னிலையில் உள்ளது. ஏனெனில் அவர்கள் அங்கு அதிகமான போட்டிகளை விளையாடி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் சூழ்நிலைகளை நன்கு புரிந்து கொள்கிறார்கள். இந்திய அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள் என்ற ஷாகீன் அப்ரிடியின் கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால் பாகிஸ்தான் அணியில் மேட்ச் வின்னர்கள் குறைவாக இருந்தாலும் ஒரு வீரர் நினைத்தால் கூட போட்டியை கைப்பற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன். இந்தியா - பாகிஸ்தான் மோதல் என்பது வெற்றியாளர்களை பற்றியது மட்டுமல்ல. எதிர்பார்ப்புகள் உங்களை மூழ்கடித்து விடாமல் இருப்பது பற்றியதாகும். இறுதி நாளில் இதனை சிறப்பாக செய்யக்கூடிய அணி வெற்றி பெறும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்