டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல்; புள்ளிகளை இழந்த இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் - காரணம் என்ன..?
|இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
துபாய்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும். இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா 61.11 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா (59.26 சதவீத புள்ளி) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா (57.69 சதவீத புள்ளி) 3-வது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து 4-வது இடம் வகித்த நிலையில் திடீர் பின்னடைவாக மெதுவாக பந்து வீசிய புகாரில் சிக்கி 3 புள்ளிகளை இழந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காததால் இவ்விரு அணிகளுக்கும் போட்டி கட்டணத்தில் 15 சதவீத அபராதமும், 3 புள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அவர்கள் பெற்ற மொத்த புள்ளியில் இருந்து இந்த 3 புள்ளி கழிக்கப்பட்டது.
இதன்படி நியூசிலாந்தின் புள்ளி எண்ணிக்கை 47.92 -ஆக குறைந்ததுடன் புள்ளிப்பட்டியலில் 4-ல் இருந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் நியூசிலாந்தின் இறுதிப்போட்டி வாய்ப்பு குறைந்துள்ளது. அதே சமயம் இங்கிலாந்துக்கு (42.50 சதவீத புள்ளி) லேசாக ஒட்டிக்கொண்டிருந்த இறுதிசுற்று வாய்ப்பு முழுமையாக பறிபோனது.