எமர்ஜிங் ஆசிய கோப்பை; பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை
|இலங்கை வீரர் துஷான் ஹேமந்தா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அல் அமேரத்,
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்ட 8 அணிகளில் இருந்து குரூப் ஏ-வில் இருந்து இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளும், குரூப் பி-யில் இருந்து இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இதில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இலங்கை ஏ - பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் உமைர் யூசுப் 68 ரன்கள் அடித்தார். இலங்கை ஏ தரப்பில் அதிகபட்சமாக துஷான் ஹேமந்தா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 136 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை ஏ களமிறங்கியது. சிறப்பாக பேட்டிங் செய்த அந்த அணி வெறும் 16.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை கடந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக அஹான் விக்ரம்சிங்கே 52 ரன்களும், லஹிரு உதாரா 43 ரன்களும் அடித்து வெற்றி பெற உதவினர். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக துஷான் ஹேமந்தா தேர்வு செய்யப்பட்டார்.
இதில் நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் ஏ - இந்தியா ஏ அணிகள் விளையாடி வருகின்றன.