< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த எல்லிஸ் பெர்ரி

தினத்தந்தி
|
8 Dec 2024 5:10 PM IST

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் எல்லிஸ் பெர்ரி 105 ரன்கள் எடுத்தார்.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் எல்லிஸ் பெர்ரி 105 ரன், ஜார்ஜியா வோல் 101 ரன் எடுத்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சைமா தாகோர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 372 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்தியா 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 249 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரிச்சா ஹோஷ் 54 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 11ம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் முதல் வீராங்கனையாக எல்லிஸ் பெர்ரி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதாவது, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 7000 + ரன்கள் மற்றும் 300 + விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற புதிய சாதனையை ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி படைத்துள்ளார். எல்லிஸ் பெர்ரி டெஸ்ட் கிரிக்கெட்டில் 928 ரன் மற்றும் 39 விக்கெட்டும், ஒருநாள் கிரிக்கெட்டில் 4064 ரன் மற்றும் 165 விக்கெட்டும், டி20 கிரிக்கெட்டில் 2088 ரன்னும், 126 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார்.

மேலும் செய்திகள்