போதைப்பொருள் விவகாரம் : நியூசிலாந்து முன்னணி வீரருக்கு கிரிக்கெட் விளையாட ஒரு மாதம் தடை
|இவர் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்டதால் தண்டனை காலம் முடிவடைந்துவிட்டது.
வெலிங்டன்,
நியூசிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டக் பிரெஸ்வேல் (வயது 34) இந்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளூர் போட்டியில் விளையாடியபோது கோகைன் போதைப்பொருள் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை எந்த வித கிரிக்கெட் போட்டியும் விளையாட முடியாத வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. முதலில் இவருக்கு 3 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை விதித்து விளையாட்டு நேர்மை ஆணையம் தீர்ப்பு வழங்கியது. எனினும் இவர் போட்டி தொடங்குவதற்கு முன்பே கோகைன் உட்கொண்டது தெரிந்ததால் தண்டனை காலத்தை ஒரு மாதமாக குறைத்து தீர்ப்பு வழங்கியது.
இவரது இடைநீக்கம் ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்கியது. இதன் விளைவாக, பந்து வீச்சாளர் ஏற்கனவே தனது தடை காலத்தை அனுபவித்துவிட்டார், இதனால் அவர் எந்த நேரத்திலும் கிரிக்கெட்டை மீண்டும் தொடங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.