ராகுல் வேண்டாம்.. ஜெய்ஸ்வாலுடன் அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்குங்கள் - ரவி சாஸ்திரி
|ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் விளையாட மாட்டார் என்ற தகவல்கள் வெளிவருகின்றன.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக விளையாட மாட்டார் என்று செய்திகள் காணப்படுகின்றன. அது போன்ற சூழ்நிலையில் அவருக்கு பதிலாக தொடக்க வீரராக கே.எல் ராகுல் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக கம்பீர் கூறியிருந்தார்.
இந்நிலையில் முதல் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் வேண்டாம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக சுப்மன் கில் தொடக்க வீரராக விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "அது தேர்வாளர்களுக்கு மிகவும் கடினமான முடிவாக இருக்கும். அங்கே நீங்கள் சுப்மன் கில்லை அனுப்பலாம். ஏனெனில் ஏற்கனவே அவர் ஆஸ்திரேலியாவில் தொடக்க வீரராக விளையாடியுள்ளார். இல்லையெனில் நீங்கள் வேறு வீரரை களமிறக்க வேண்டும். அபிமன்யு ஈஸ்வரன் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் நன்றாக விளையாடவில்லை. இருப்பினும் அவரும் ராகுலும் வலைப்பயிற்சியில் எவ்வாறு பேட்டிங் செய்கிறார்கள் என்பது முக்கியம். சுப்மன் கில் நமக்கு நல்ல தேர்வாக இருப்பார்.
பயிற்சியாளராக நான் எப்போதும் வீரர்களின் கால் நகர்வதை (புட் ஒர்க்) பார்ப்பேன். சில நேரங்களில் ரன்கள் முக்கியமல்ல. ஆனால் உங்களுடைய வீரரின் கால்கள் நன்றாக நகர்ந்தால் சூழ்நிலையை புரிந்து விளையாடுகிறார் என்பது அர்த்தம். வெளிநாடுகளில் விளையாடும்போது இது போன்ற விஷயங்களை கவனித்து நீங்கள் வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரை வலைப்பயிற்சியில் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் எப்படி இயங்குகிறார்கள் என்பதைப் பார்ப்பேன். ஏனெனில் அவர்கள் நல்ல விதத்தில் இருப்பது முக்கியம்" என்று கூறினார்.