ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல இந்திய அணிக்கு வாய்ப்புள்ளதா..?
|உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது.
புதுடெல்லி,
3-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லண்டன் லார்ட்சில் நடக்கும் இதன் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தென் ஆப்பிரிக்கா முன்னேறியுள்ளது.
இந்த இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது? என்பதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏறக்குறைய மற்ற அனைத்து அணிகளும் வெளியேறிவிட்டன.
இதில் ஆஸ்திரேலிய அணிக்கே அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்திய அணிக்கு இன்னும் ஒரு போட்டி (ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பையின் 5-வது டெஸ்ட்) மட்டுமே எஞ்சியுள்ளது. இதில் கட்டாயம் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும். ஒருவேளை தோல்வியடைந்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பில்லை.
அது மட்டுமின்றி ஆஸ்திரேலிய அணி எதிர்வரும் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றில் கூட வெற்றி பெற கூடாது. ஒன்றில் வெற்றி பெற்றாலும் இந்திய அணியின் இறுதிப்போட்டி கனவு முடிந்துவிடும்.