மேகிமேன் எங்கிருந்து ஹிட்மேனாக உருவெடுத்தார் தெரியுமா..? - ரோகித் நண்பர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
|ஆரம்ப காலங்களில் பிட்னஸ் இல்லாததால் மேகிமேன் என்று ரோகித் சர்மா கிண்டலடிக்கப்பட்டதாக அவருடைய நண்பரான அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.
மும்பை,
விராட் கோலிக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படும் அவர், ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் தடுமாறினாலும் ஓப்பனிங்கில் களமிறங்கியது முதல் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள் அடித்துள்ளார்.
2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் போன்ற நிறைய உலக சாதனைகளையும் அவர் படைத்துள்ளார். இதனால் அவர் ரசிகர்களால் 'ஹிட்மேன்' என்று போற்றப்படுகிறார். இதற்கிடையே ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றதால் தற்போது இந்தியாவின் கேப்டனாகவும் அவர் முன்னேறியுள்ளார்.
இந்நிலையில் ஆரம்ப காலங்களில் கொஞ்சம் தொப்பையுடன் பிட்னஸ் இல்லாததால் மேகிமேன் என்று ரோகித் சர்மா கிண்டலடிக்கப்பட்டதாக அவருடைய நண்பரும், இந்திய முன்னாள் வீரருமான அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அங்கிருந்து கடினமாக உழைத்த ரோகித் சர்மா இன்று ஹிட்மேனாக முன்னேறியுள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "2011 உலகக்கோப்பையில் ரோகித் சர்மா தேர்வு செய்யப்படாதபோது கடினமாக உழையுங்கள் என்று அவரிடம் சொன்னேன். ஏனெனில் அந்த சமயத்தில் அவர் கொஞ்சம் அதிக எடையைக் கொண்டிருந்தார். ஒருமுறை யுவராஜ் மற்றும் ரோகித் நின்று கொண்டிருந்தனர். அப்போது ரோகித் வயிற்றை சுற்றி ஒரு வட்டம் இருந்தது. அதை நோக்கி ஒரு அம்புக்குறி (தொப்பையை குறித்து) இருந்ததை நான் மறக்க மாட்டேன். பின்னர் அதை நாங்கள் வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் பார்த்தோம்.
அப்போது அதைப் பார்த்த ரோகித் இதை நான் மாற்ற வேண்டும் என்று சொன்னார். சில நாட்களுக்கு பின் உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட்டது. அதில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அங்குதான் ரோகித் சர்மா ஹிட்மேனாக உருவானார். ஏனெனில் அந்த வாய்ப்பு கிடைக்காததால் அவர் தன்னுடைய அணுகு முறையையும் கெரியரையும் மாற்ற விரும்பினார்.
என்னுடைய பயணத்தில் அவர்தான் வெற்றிகரமாக மாறிய முதல் கிரிக்கெட்டர். அவரைப் பற்றி பலரும் 2 நிமிட மேகிமேன் என்பது போன்ற பலவற்றை சொல்வார்கள். இருப்பினும் அதுவே அனைத்தையும் மாற்றியது. அப்போது 'யார் என்ன சொன்னாலும் இந்த ஐபிஎல் முடிந்ததும் அனைவரும் இவர் அதே பழைய நபர் கிடையாது என்று சொல்வார்கள்' என ரோகித் என்னிடம் சொன்னார்" என்று கூறினார்.