< Back
கிரிக்கெட்
இந்திய அணியில் எப்போதும் கோலி - ரோகித் பெயர் மட்டும்தான் கேட்க வேண்டுமா? பாக். முன்னாள் வீரர்
கிரிக்கெட்

இந்திய அணியில் எப்போதும் கோலி - ரோகித் பெயர் மட்டும்தான் கேட்க வேண்டுமா? பாக். முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
6 Aug 2024 12:58 PM IST

சவாலான பிட்ச்சில் தரமான சுழலை எதிர்கொள்ள ரோகித் சர்மாவை தவிர்த்து இந்திய அணியில் வேறு யாருமே இல்லையா? என பாசித் அலி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

கராச்சி,

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் 2-வது போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

முன்னதாக இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 64 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். ஆனால் அக்சர் படேலை (44 ரன்கள்) தவிர்த்து மற்ற முன்னணி பேட்ஸ்மேன்களான விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் போன்றவர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர். அதனால் 208 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் சவாலான பிட்ச்சில் தரமான சுழலை எதிர்கொள்ள ரோகித் சர்மாவை தவிர்த்து இந்திய அணியில் வேறு யாருமே இல்லையா? என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் ஸ்ரேயாஸ், ராகுல் ஆகியோர் பயிற்சியே எடுக்காமல் நேரடியாக களமிறங்கியது போல் இலங்கை பவுலர்களிடம் அவுட்டானதாக அவர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இது மிகவும் மோசமான செயல்பாடு. ஸ்ரேயாஸ் - கேஎல் ராகுல் ஆகியோர் பயிற்சி எடுக்காமலேயே இத்தொடருக்கு வந்ததுபோல் தெரிகிறது. அது மிகப்பெரிய கேள்விக்குறியாகும். 97 ரன்களில்தான் முதல் விக்கெட் விழுந்தது. இது உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் பேட்டிங் வரிசைபோல் தெரியவில்லை. இந்திய அணியில் ரோகித் மட்டும்தான் ஒரே பேட்ஸ்மேனா? மற்றவர்கள் இல்லையா. கில் 30 - 35 ரன்களில் அவுட்டானால் யார் பொறுப்பை எடுத்துக் கொள்வது?

எப்போதும் விராட் கோலி - ரோகித் பெயர் மட்டும் தான் கேட்க வேண்டுமா? மற்றவர்கள் என்ன செய்கின்றனர். அக்சர் படேல் மட்டுமே சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் விளையாடினார். ஸ்ரேயாஸ் ஐயர் இது போன்ற செயல்பாடுகளால் என்ன செய்கிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது ரிஷப் பண்ட், ரிங்கு சிங், ரியன் பராக் ஆகியோர் வர வேண்டிய நேரம். உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து கம்பீர் சில வீரர்களை தேர்ந்தெடுக்கலாம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்