பார்டர் - கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியாதான் வெல்லும் - இந்திய முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து
|தினேஷ் கார்த்திக், பார்டர் - கவாஸ்கர் டிராபியை எந்த அணி வெல்லும்? என்ற தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.
அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனிடையே டெஸ்ட் தொடரின் கணிப்புகளை பல முன்னாள் வீரர்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பார்டர் - கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியாதான் வெல்லும் என்று பரபரப்பான கணிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "இரு அணிகளும் எத்தனை போட்டிகளில் வெல்லும் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெறும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர்களின் மண்ணில் தொடர்ந்து 3வது முறையாக வெல்வது எளிதான விஷயம் கிடையாது. ஒருவேளை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மகத்தான சாதனையாக இருக்கும்" என்று கூறினார்.