மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டரா கிரகாம் தோர்ப்? மனைவி வெளியிட்ட பரபரப்பு தகவல்
|இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கிரகாம் தோர்ப் கடந்த 5-ம் தேதி காலமானார்
லண்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான கிரகாம் தோர்ப் (55 வயது), கடந்த 5-ம் தேதி காலமானார். அவர் இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6744 ரன்கள் அடித்திருக்கிறார். இதேபோன்று இங்கிலாந்து அணிக்காக 82 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2350 ரன்கள் அடித்துள்ளார். ஓய்வு பெற்ற பின்னர் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார்.
இந்த நிலையில் கிரகாம் தோர்ப், கடந்த 5-ம் தேதி உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்து இருக்கலாம் என்று பலரும் எண்ணிய நிலையில் தற்போது அவருடைய மனைவி பரபரப்பு தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவருடைய மனைவி அமண்டா, "கிரகாம் தோர்பேவுக்கு இரண்டு அழகான குழந்தைகள், மனைவி என அவரை விரும்பக்கூடிய நல்ல வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. மன அழுத்தம், பதற்றம் என கிரகாம் தோர்ப்பே தன் வாழ்க்கையை வாழ முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டார். அவரை மீட்டுக் கொண்டு வந்து விடலாம் என்று நாங்கள் எவ்வளவோ போராடினோம். ஆனால் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த கிரகாம் தார்பே தன்னுடைய உயிரை தானே மாய்த்து கொண்டார்.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் மன உளைச்சல் பிரச்சனைக்காக கிரகாம் தோர்ப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சையில் ஆரம்பத்தில் நல்ல பலன் கிடைத்தது. ஆனால் மீண்டும் அவர் பழைய நிலைக்கு சென்று விட்டார். ஒரு குடும்பமாக நாங்கள் அவருக்கு துணையாக நின்றோம். ஆனால் எதுவுமே கை கொடுக்கவில்லை. கிரிக்கெட் விளையாடும்போது மனதளவில் பலமான வீரராக கிரகாம் தோர்ப் இருந்தார். அவருக்கு உடல் அளவிலும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டால் அது பல விளைவுகளை உருவாக்கும். கிரகாம் தோர்பேவின் வாழ்க்கை அப்படித்தான் ஆனது. எனவே மன அழுத்தத்தை யாரும் சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். அது யாரை வேண்டுமானாலும் பாதிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது மகள் கிட்டி, "என்னுடைய தந்தை மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூற நாங்கள் வெட்கப்படவில்லை. இது போல் இனி யாரும் உயிரிழக்க கூடாது என்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார்.