< Back
கிரிக்கெட்
தோனியா? ரிஷப் பண்டா? யார் சிறந்த விக்கெட் கீப்பர்? - ஆகாஷ் சோப்ரா கருத்து
கிரிக்கெட்

தோனியா? ரிஷப் பண்டா? யார் சிறந்த விக்கெட் கீப்பர்? - ஆகாஷ் சோப்ரா கருத்து

தினத்தந்தி
|
23 Sept 2024 6:53 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை விட ரிஷப் பண்ட் சிறந்த விக்கெட் கீப்பர் என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

சென்னை,

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நிறைவடைந்துள்ளது. இதில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார். இதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 6 சதங்கள் அடித்துள்ளார். அதனால் அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையையும் ரிஷப் பண்ட் சமன் செய்தார்.

அது போக ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க மண்ணில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் முடியாத சாதனையையும் ரிஷப் பண்ட் படைத்துள்ளார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை விட ரிஷப் பண்ட் தான் சிறந்தவர் என்று பலரும் பாராட்டத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் எப்போதும் அவரால் தோனிக்கு நிகராக முடியாது என்று தினேஷ் கார்த்திக், அஜய் ஜடேஜா போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய வெளிநாடுகளில் இந்தியா தரப்பில் சதமடித்த முதல் விக்கெட் கீப்பர் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். எனவே இப்போதில்லை என்றாலும் வருங்காலத்தில் ரிஷப் பண்ட் இந்தியாவின் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக போற்றப்படுவார் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. "எம்எஸ் தோனியின் பெயர் தற்போது அந்தப் பட்டியலில் இருக்கிறது. ஆனால் அதில் கேள்வி இருக்கிறது. இருப்பினும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் வெளிப்படுத்திய செயல்பாடுகளின் பார்வையில் நீங்கள் பார்க்க வேண்டும். ஏனெனில் நாம் அப்படித்தான் வளர்ந்தோம். ரிஷப் பண்ட் மட்டுமே தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சதமடித்த ஒரே விக்கெட் கீப்பர்.

ஏற்கனவே அவர் 6 சதங்கள் அடித்துள்ளார். அதை வெறும் 58 இன்னிங்ஸ்களில் அடித்துள்ளார். எனவே அவர் கண்டிப்பாக மகத்தான கீப்பராக கெரியரை முடிப்பார். அவரைப் பார்த்து ஒவ்வொரு அணியும் கொஞ்சம் பயப்படலாம். ஏனெனில் தொடர்ச்சியாக அசத்தும் அவரைப் போன்ற வீரர் மீது வித்தியாசமான பயம் இருக்கும். அவரைப் போன்றவரை ஆரம்பத்திலேயே அவுட்டாக்காவிட்டால் நாள் முழுவதும் நின்று ரன்கள் குவிப்பார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்