டெல்லி பிரீமியர் லீக்; சாம்பியன் பட்டம் வென்ற கிழக்கு டெல்லி ரைடர்ஸ்
|கிழக்கி டெல்லி தரப்பில் சிமர்ஜித் சிங், ரோனக் வஹேலா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
புதுடெல்லி,
தமிழகத்தில் டி.என்.பி.எல். தொடர் நடத்தப்படுவதை போல் டெல்லியில், டெல்லி பிரீமியர் லீக் என்ற பெயரில் டி20 கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு அறிமுகம் ஆனது. இந்த தொடர் கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசனின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் கிழக்கு டெல்லி ரைடர்ஸ் - தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கிழக்கு டெல்லி ரைடர்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 183 ரன்கள் குவித்தது. கிழக்கு டெல்லி தரப்பில் அதிகபட்சமாக மயங்க் ராவத் 78 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தெற்கு டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் கிழக்கு டெல்லி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. தெற்கு டெல்லி தரப்பில் அதிகபட்சமாக தேஜஸ்வி தஹியா 68 ரன்கள் எடுத்தார். கிழக்கு டெல்லி தரப்பில் சிமர்ஜித் சிங், ரோனக் வஹேலா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.