டியர் ராகுல் பாய்... - டிராவிட்டுக்கு ரோகித் சர்மா உருக்கமான பாராட்டு
|வேலை செய்யும் இடத்தில் ராகுல் டிராவிட்தான் உங்களுடைய மனைவி என்று தம்முடைய மனைவி ரித்திகா அடிக்கடி சொல்வார் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
மும்பை,
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்றதும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் தங்களது முடிவுகளை அறிவித்தனர்.
மேலும், டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது.
டிராவிட் தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு ஐ.சி.சி. தொடர்களில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தாலும் கோப்பைகளை வெல்ல முடியவில்லை என்ற குறை நீடித்து வந்தது. அந்த குறையையும் தற்போது நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வந்தது. வெற்றிகரமாக பயிற்சியாளராக தனது பயணத்தை முடித்து இந்திய அணியில் இருந்து வெளியேறி உள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக முதல் கோப்பையை வெல்ல உதவிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கேப்டன் ரோகித் சர்மா உருக்கமான வாழ்த்தையும் பாரட்டையும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக வேலை செய்யும் இடத்தில் ராகுல் டிராவிட்தான் உங்களுடைய மனைவி என்று தம்முடைய மனைவி ரித்திகா அடிக்கடி சொல்வார் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. "டியர் ராகுல் பாய். இதைப் பற்றிய எனது உணர்வுகளை வெளிப்படுத்த சரியான வார்த்தைகளை கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். ஆனால் நான் அதை சரியாக செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. எனவே என்னுடைய முயற்சி இதோ. என்னுடைய சிறு வயது நாட்களிலிருந்தே பல பில்லியன் ரசிகர்களைப் போல நானும் உங்களை பார்த்து வளர்ந்தேன். ஆனால் அதையும் தாண்டி உங்களுடன் நெருக்கமாக வேலை செய்வதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.
நீங்கள் இந்த விளையாட்டின் நட்சத்திரம். ஆனால் நீங்கள் உங்களுடைய பாராட்டுகள், சாதனைகள் உள்ளிட்ட அனைத்தையும் விட்டு விட்டு பயிற்சியாளராக நடந்து வந்து உங்களிடம் நாங்கள் நினைக்கும் அனைத்தையும் சொல்ல வசதியாக உணரும் அளவுக்கு வந்தீர்கள். அதுவே உங்கள் பரிசு, உங்கள் பணிவு மற்றும் இந்த விளையாட்டின் மீதான உங்கள் அன்பு. நான் உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு நினைவும் பாராட்டப்படும்.
வேலை செய்யும் இடத்தில் நீங்கள்தான் என்னுடைய மனைவி என்று என் மனைவி குறிப்பிடுவார். அப்படி அழைப்பதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். உங்கள் சாதனைகளில் இருந்து விடுபட்ட ஒரே விஷயமான உலகக்கோப்பையை நாம் ஒன்றாக சாதித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். ராகுல் பாய் உங்களை நம்பிக்கைகுரியவர், பயிற்சியாளர், எனது நண்பர் என்றழைப்பது முழுமையான பாக்கியம்" என்று பதிவிட்டுள்ளார்.