ஷிவம் துபேவுக்கு பதிலாக அவரை அணியில் சேர்த்திருக்கலாம் - பாக். முன்னாள் வீரர் விமர்சனம்
|ஷிவம் துபே ஒருநாள் அணிக்கு பொருத்தமற்ற வீரர் என சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
லாகூர்,
இந்தியா - இலங்கை இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் 2-வது போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடையும். மாறாக இலங்கை வெற்றி பெறும் பட்சத்தில் 27 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றும்.
முன்னதாக இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் குறைந்த இலக்கை நிர்ணயித்த இலங்கை, அதை துரத்திய இந்தியாவை சுழல் பந்துவீச்சு மூலம் கட்டுப்படுத்தி அசத்தியது. ரோகித் தவிர அனைத்து பேட்ஸ்மேன்களுமே தடுமாறினர்.
இந்நிலையில் ஷிவம் துபே இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருப்பார். ஆனால் ஒருநாள் அணிக்கு செட்டாக மாட்டார் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார். ஏனெனில் பீல்டிங்கில் சுமாராக செயல்படும் ஷிவம் துபே கொஞ்சம் நிதானமாக விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டிங்கிலும் தொடர்ந்து அசத்துவதில்லை என்று அவர் கூறியுள்ளார். - அவருக்கு பதிலாக சூர்யகுமார் விளையாடியிருக்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இதற்கான காரணம் குறித்து பேசியது பின்வருமாறு:-
"சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் இந்தியா தங்களுடைய திட்டத்தை மீண்டும் சிந்திக்க வேண்டும். அதற்காக சூர்யகுமார் யாதவ் அணியில் இருக்கலாம். ஏனெனில் அவரை விட ஷிவம் துபே பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் சிறந்தவர் என்று நான் நினைக்கவில்லை. அவர் எப்படி ஒருநாள் அணிக்குள் வந்தார் என்பதும் எனக்கு தெரியவில்லை. அவருடைய உள்ளூர் விளையாட்டின் புள்ளி விவரங்கள் எனக்கு தெரியாது. ஒருநாள் கிரிக்கெட்டில் சூர்யகுமாரின் புள்ளிவிவரங்கள் நன்றாக இல்லைதான்.
ஆனால் நல்ல பார்மில் இருக்கும் அவர் சமீபத்தில் இலங்கை மண்ணில் ரன்கள் அடித்தார். அற்புதமான பீல்டரான அவருடைய கேப்டன்ஷிப் கெரியரும் ஒளிமயமாக துவங்கியுள்ளது. ஆனால் பீல்டிங் என்று வரும்போது ஷிவம் துபே தாமதமாக செயல்படுகிறார். இந்திய அணி தங்களுடைய பேட்டிங்கில் புத்திசாலித்தனமான பிட்டான வீரர்களைத்தான் விரும்புகிறது. ஆனால் ஓரிரு முறை மட்டுமே 40 - 50 ரன்கள் அடிக்கும் துபே தொடர்ந்து அசத்துவதில்லை. பிட்டாகவும் இல்லாத அவர் பேட்டிங்கில் தொடர்ந்து அசத்துவதில்லை" என்று கூறினார்.