< Back
கிரிக்கெட்
எங்கள் நாட்டுக்கு வாருங்கள்... இல்லையெனில்.. - இந்தியாவுக்கு பாக்.முன்னாள் வீரர் எச்சரிக்கை
கிரிக்கெட்

எங்கள் நாட்டுக்கு வாருங்கள்... இல்லையெனில்.. - இந்தியாவுக்கு பாக்.முன்னாள் வீரர் எச்சரிக்கை

தினத்தந்தி
|
14 Nov 2024 8:16 PM IST

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளது.

லாகூர்,

சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தொடருக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளது.

2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான நேரடி போட்டி தொடரில் விளையாடாத இந்திய அணி, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கு செல்ல மறுத்து வருகிறது. இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை பொதுவான இடமான துபாய்க்கு மாற்ற வேண்டும் என்று பி.சி.சி.ஐ.கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால் அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ளவில்லை. கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வரவில்லை என்றால் போட்டியை நடத்துவதை கைவிடுவதுடன், போட்டியில் இருந்து விலகுவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு வந்து இந்தியா விளையாட வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் வீரர் ரசித் லதீப் கூறியுள்ளார். இல்லையெனில் இந்திய அணிக்கு எதிராக ஐ.சி.சி. மற்றும் ஆசிய தொடர்களில் விளையாடுவதை கூட பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:- "இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மொத்தமாக விளையாடுவதை நிறுத்துவதற்கு அதிகப்படியான வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை என்னிடம் அதிகாரம் இருந்தால் இந்த முடிவை எடுப்பதில் நான் வலுவாக இருப்பேன். நான் யாரையும் குறை சொல்ல மாட்டேன். ஒருவேளை நீங்கள் பாகிஸ்தானில் விளையாடாவிட்டால் எங்களுக்கு எதிராக மொத்தமாக விளையாடாதீர்கள்.

ஒருவேளை நான் பாகிஸ்தான் வாரியத்தில் இருந்தால் இந்த முடிவை எடுப்பேன். என்னைப் பொறுத்த வரை இந்த பிரச்சினை முடியும் வரை இரு நாடுகளுக்கும் முக்கிய தொடர்களை நடத்தும் உரிமையை கொடுப்பதை ஐ.சி.சி. நிறுத்தி வைக்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையே பிரச்சனை தீரும் வரை அனைத்தையும் நிறுத்துங்கள். ஏன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை ஐ.சி.சி. தடை செய்யவில்லை?

ஏனெனில் அந்த நாடுகளில் இருந்து ஐ.சி.சி.க்கு நிறைய வருமானம் கிடைக்கிறது. ஐ.சி.சி. பாதுகாப்பு குழுவினர் பாகிஸ்தானுக்கு வந்து இங்கே அனைத்தும் பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். எனவே பிரச்சினை இருந்தால் இந்தியா அவர்களிடம் புகார் சொல்ல வேண்டும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்