பயிற்சியாளர் - வீரர்கள் இடையேயான விவாதங்கள் அணிக்கு உள்ளேயே இருக்க வேண்டும் - கம்பீர்
|சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு மட்டுமே அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கும் என்று கம்பீர் கூறியுள்ளார்.
சிட்னி,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் தொடரின் முடிவை நிர்ணயிக்கும் இந்த கடைசி போட்டியின் மீது மிகுந்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துக்கொள்ளும். மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பிலும் நீடிக்கும். மறுபுறம் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் பல வருடங்களுக்கு பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை மீண்டும் கைப்பற்றும். மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு 2-வது முன்னேற அதிக வாய்ப்புள்ளது. இதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் பேசுகையில், "பயிற்சியாளர் மற்றும் வீரர்களுக்கு இடையேயான விவாதங்கள் அணிக்கு உள்ளேயே இருக்க வேண்டும். அது பற்றி வெளியான செய்திகள் உண்மையல்ல. ஒரு அணியாக நீங்கள் முன்னேற விரும்புகிறீர்கள். எனவே அணிக்குள் சில உண்மையான விவாதங்கள் நடைபெறுவது முக்கியம். ஒவ்வொரு வீரர்களுக்கும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். எந்த பகுதியில் வேலை செய்ய வேண்டும் என்பதும் தெரியும். எனவே அவர்களைப் பற்றி நான் பேச மாட்டேன்.
நாங்கள் அணியாக வெல்கிறோம் அணியாக தோற்கிறோம். நாட்டுக்காக விளையாடும்போது நீங்கள் உங்களுடைய அதிகபட்ச பங்களிப்பை கொடுக்க வேண்டும். அது நிகழாதபோது நடைபெறும் விவாதங்கள் பயிற்சியாளர் மற்றும் வீரர்களுக்கு இடையே மட்டும் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக நாம் வெற்றிகளை மட்டுமே பார்க்கிறோம். எனவே எங்களுடைய அணிக்குள் இருக்கும் விவாதங்கள் அணிக்கு உள்ளேயே இருக்க வேண்டும். அணியில் நேர்மையான மக்கள் இருக்கும் வரை இந்திய அணி பாதுகாப்பான கைகளில் இருக்கும். நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவது மட்டுமே உங்களை இந்திய அணியில் தொடர்ந்து வைத்திருக்கும்" என்று கூறினார்.
முன்னதாக 4-வது போட்டி தோல்விக்குப்பின் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் இடையே விவாதங்கள் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின. அதற்கு விளக்கமளிக்கும் வகையில் கம்பீர் தற்போது பேசியுள்ளார்.