< Back
கிரிக்கெட்
சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதல்: விராட் கோலியை விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள்
கிரிக்கெட்

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதல்: விராட் கோலியை விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள்

தினத்தந்தி
|
26 Dec 2024 12:37 PM IST

பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டியின்போது கான்ஸ்டாஸ் - விராட் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா தற்போது வரை 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 292 ரன்களுடன் விளையாடி வருகிறது.

முன்னதாக இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகம் ஆன சாம் கான்ஸ்டாஸ் தொடக்க வீரராக களமிறங்கினார். அந்த வாய்ப்பில் சிறப்பாக விளையாடிய அவர் 60 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதனிடையே அவர் பேட்டிங் செய்தபோது 10வது ஓவரின் முடிவில் பந்தை கையில் எடுத்துக்கொண்டு ஓவர் மாற்றுவதற்காக விராட் கோலி நடந்து சென்றார். அதே பாதையில் எதிர்புறம் கான்ஸ்டாஸ் நடந்து வந்தார். அப்போது இருவரும் தங்களுடைய தோளில் நேருக்கு நேராக கொஞ்சம் பலமாக இடித்துக் கொண்டார்கள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. உடனடியாக அருகில் இருந்த உஸ்மான் கவாஜா மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து நிறுத்தினார்கள்.

இந்த சம்பவத்தில் விராட் கோலி மீதுதான் தவறு உள்ளதாக முன்னாள் வீரர்களான ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாண்டிங் மற்றும் இங்கிலாந்தின் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளனர்.

இது குறித்து பாண்டிங் கூறுகையில், "விராட் கோலி எப்படி நடந்து வருகிறார் என்று பாருங்கள். விராட் கோலி வேண்டுமென்று மைதானத்தில் ஒரு இடத்தில் இருந்து நகர்ந்து வந்து அவர்தான் இந்த மோதலை ஆரம்பிக்கிறார். இதில் விராட் கோலி மீது தான் தவறு இருக்கிறது. இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்று கூறியுள்ளார்.

மைக்கேல் வாகன் கூறுகையில், "கான்ஸ்டாஸ் அவர் வழியில்தான் சென்று கொண்டிருந்தார். விராட் கோலிதான் வேண்டுமென்றே கான்ஸ்டாஸ் திசை நோக்கி வந்து அவரை மோதினார். விராட் கோலி ஒரு ஆல் டைம் சிறந்த வீரர். அனுபவம் நிறைந்த நபர். இந்த போட்டி முடிந்தவுடன் நான் ஏன் இதை செய்தேன் என்று விராட் கோலி தனக்குள் கேள்வி கேட்டுக் கொள்வார்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்