ரிஷப் பண்டை தேர்வு செய்வது எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது - லக்னோ உரிமையாளர்
|ஐ.பி.எல். ஏலத்தில் ரிஷப் பண்டை லக்னோ அணி ரூ.27 கோடிக்கு வாங்கியது
ஜெட்டா,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன. 10 அணிகளும் மொத்தம் 46 வீரர்களை தக்க வைத்துள்ளன.
ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்று வருகிறது. டெல்லி அணி கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்டை விடுவித்தது. இதையடுத்து ஏலத்திற்கு வந்த ரிஷப் பண்டை லக்னோ அணி ரூ.27 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.
இதையடுத்து லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்படலாம் என தெரிகிறது. இந்நிலையில், நேற்றைய ஏலத்தில் ரிஷப் பண்டை வாங்கிய பின்னர் லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறியதாவது, ரிஷப் பண்டை தேர்வு செய்வது என்பது எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அவர் பட்டியலில் இருந்ததால் அவருக்காக கோடிக்கணக்கில் வைத்து இருந்தோம்.
அவரது தொகை ரூ.27 கோடி என்று சற்று உயர்ந்து விட்டது. நாங்கள் ரூ. 26 கோடி வரை திட்டமிட்டிருந்தோம். ஆனால் எங்களுக்கு அவர் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ரிஷப் பண்ட் சிறந்த வீரர் மற்றும் மேட்ச் வின்னர். அவர் லக்னோ அணியில் இடம் பெற்று இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.