சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் - மொசின் நக்வி
|சாம்பியன்ஸ் கோப்பை போட்டி பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று அதன் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி கூறியுள்ளார்.
லாகூர்,
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தானில் நடக்கிறது. ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டதால் இந்த போட்டி திட்டமிட்டபடி அங்கு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணிக்குரிய ஆட்டங்களை மட்டும் வேறுநாட்டுக்கு மாற்றும் யோசனைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிப்பதால் குழப்பம் நிலவுகிறது.
இந்திய அணி வராவிட்டால் ஐ.சி.சி. மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இன்னொரு பக்கம் போட்டிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி நேற்று லாகூரில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பாகிஸ்தானுக்கு வந்து விளையாடமாட்டோம் என்று இந்தியா மறுத்தது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கடிதம் எழுதி உள்ளோம். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். விளையாட்டையும், அரசியலையும் தனித்தனியாக பார்க்க வேண்டும். எந்த நாடும் அவற்றை ஒன்றாக கலக்கக்கூடாது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் விஷயத்தில் எல்லாமே சரியாக நடக்கும் என்று நம்புகிறேன்.
எங்களை பொறுத்தவரை பாகிஸ்தானின் கவுரவமும், மதிப்பும் மிகவும் முக்கியம். சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும். அவற்றில் ஒரு பகுதி ஆட்டங்களை வேறு நாட்டில் நடத்தும் யோசனையை ஏற்றுக்கொள்ளமாட்டோம். இந்த போட்டிக்கு தகுதி பெற்ற மற்ற அணிகள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு வர தயாராக உள்ளன. அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனவே இந்திய அணிக்கு இங்கு வந்து விளையாடுவதில் ஏதாவது சிக்கல் இருந்தால், அவர்கள் எங்களிடம் பேசட்டும்.
அவர்களின் கவலையை எங்களால் எளிதில் தீர்க்க முடியும். அவர்கள் இங்கு வராததற்கு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை. எனவே போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுவதில்லை என்ற எங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூடிய சீக்கிரம் போட்டி அட்டவணையை வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.