< Back
கிரிக்கெட்
சாம்பியன்ஸ் டிராபி: வேறு இடத்திற்கு மாற்றமா..? பாக்.கிரிக்கெட் வாரியம் விளக்கம்
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி: வேறு இடத்திற்கு மாற்றமா..? பாக்.கிரிக்கெட் வாரியம் விளக்கம்

தினத்தந்தி
|
11 Jan 2025 7:15 PM IST

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான மைதானங்கள் இன்னும் முழுமையாக தயாராகவில்லை என செய்திகள் வெளியாகின.

லாகூர்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி ஆட்டங்கள் நடைபெற லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டி ஆகிய மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மைதானங்களில் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை கடந்த ஆகஸ்டு மாதம் பாகிஸ்தான் தொடங்கியது. புதுப்பிப்பு பணிகளை முடித்து பிப்ரவரி 12-ந்தேதிக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) ஒப்படைக்க வேண்டும்.

ஆனால் லாகூர் மற்றும் கராச்சியில் இன்னும் பெரிய அளவில் கட்டுமான பணிகள் எஞ்சியுள்ளன. இதனால் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடிவடையாது என்றும் எனவே இந்த போட்டி பாகிஸ்தானில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு முழுமையாக மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இதனை மறுத்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வேறு இடத்திற்கு மாற்றப்படாது என திட்டவட்டமாக கூறியுள்ளது.

இது குறித்து விளக்கமளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், "எங்கள் நாட்டு ஊடகங்கள் உண்மையை சரிபார்க்காமல் யூகத்தின் அடிப்படையில் இதுபோன்ற செய்தியை வெளியிட்டு இருப்பதால் நாங்கள் இந்த விளக்கத்தை அளிக்க வேண்டியதாகி விட்டது. இது மாதிரியான செய்திகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐ.சி.சி., அரசு, வணிக கூட்டாளிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் டிக்கெட் விற்பனை மற்றும் போட்டியை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை பாதிக்கும்.

உள்ளூர் நிருபர் ஒருவர், அனுமதியின்றி, கராச்சி மைதானத்தின் கட்டுமானப் பணிகளைப் படம்பிடித்துள்ளார். ஸ்டேடியம் புதுப்பிக்கும் பணிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அதிகாரிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. சரியான நேரத்தில் பணிகள் முடிக்கப்பட்டு விடும். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தும். போட்டி வேறு நாட்டுக்கு மாற்றப்படும் என்பது உள்ளிட்ட எந்தவொரு யூகத்தையும் நம்ப வேண்டியதில்லை" என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்