சாம்பியன்ஸ் டிராபி தொடர்; அணிக்கு திரும்பும் முகமது ஷமி..? - வெளியான தகவல்
|சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது.
புதுடெல்லி,
8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடருக்கான அணிகளை வரும் 12-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணியில் யார்? யார்? இடம் பெறுவார்கள் என எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில், முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் அணியில் இடம் பிடிப்பார் என கூறப்படுகிறது.
இந்த அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஜஸ்ப்ரீத் பும்ரா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு வரும் 12ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.