சாம்பியன்ஸ் டிராபி தொடர்; ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக பாகிஸ்தான் முன்னாள் வீரர் நியமனம்
|சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது.
காபூல்,
8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடருக்கான அணிகளை வரும் 12-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த தொடருக்காக ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக பாகிஸ்தான் முன்னாள் வீரரான யூனிஸ் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். யூனிஸ் கான் பாகிஸ்தான் அணிக்காக 118 டெஸ்ட், 265 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அறிவிப்பை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.