கிரிக்கெட்
சாம்பியன்ஸ் டிராபி; இந்திய அணியில் ஜெய்ஸ்வால் தேவையில்லை - முன்னாள் வீரர் கருத்து

Image Courtesy: AFP

கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி; இந்திய அணியில் ஜெய்ஸ்வால் தேவையில்லை - முன்னாள் வீரர் கருத்து

தினத்தந்தி
|
11 Feb 2025 4:59 PM IST

8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.

புதுடெல்லி,

8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடக்கிறது.

இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரரான பும்ரா இடம் பெற்றிருந்தாலும் அவர் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால் இடம் பிடித்திருந்தாலும் அவர் பிளேயிங் லெவனில் இடம் பெறபோவதில்லை.

எனவே, அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை அணியில் எடுக்கலாம் என இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்திய அணியின் பேட்டிங் வரிசை செட்டாகி விட்டது போல தெரிகிறது. ரோகித் மீண்டும் ரன்கள் அடிக்க தொடங்கி உள்ளார். துணை கேப்டன் சுப்மன் கில் நல்ல பார்மில் உள்ளார். விராட் கோலியும் பார்முக்கு வந்துவிடுவார்.

அவர் பார்முக்கு வரவில்லையென்றாலும் அவரை அணியில் இருந்து நீக்கப்போவதில்லை. 4வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் அல்லது ரிஷப் பண்ட் அல்லது அக்சர் படேல் 5வது இடத்தில் விளையாடுவார்கள். எனவே, ஜெய்ஸ்வால் உங்களுக்குத் தேவைப்பட மாட்டார் என்பதே தற்போதைய சாத்தியக்கூராக இருக்கிறது. நீங்கள் பேட்டிங் வரிசையில் இடது - வலது கை கலவையும் இருக்க விரும்புவீர்கள்.

ஆனால், ஸ்ரேயாஸ் ஐயரை நீங்கள் கழற்றி விட பார்த்தது உங்களுக்கே ஆபத்தாக முடிந்தது. எனவே ஜெய்ஸ்வாலை நீங்கள் விளையாடாவிட்டால் ஏன் சாம்பியன்ஸ் டிராபிக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டும்?. அது போன்ற சூழ்நிலையில் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் விளையாடுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

பாகிஸ்தானுக்கு எதிராக உங்களுக்கு அனுபவமிக்க பவுலிங் அட்டாக் தேவைப்படுகிறது. அதனால் நீங்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட விரும்புவீர்கள். அந்த நிலைமையில் சிராஜ் உள்ளே வரக்கூடும். ஜெய்ஸ்வால் அவருக்கு வழி விடும் நிலைமை ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்