கிரிக்கெட்
சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானில் இருந்து மாற்றமா..? வெளியான தகவல்
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தானில் இருந்து மாற்றமா..? வெளியான தகவல்

தினத்தந்தி
|
9 Jan 2025 2:16 PM IST

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

லாகூர்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23-ந்தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. முன்னதாக பிப். 20-ந்தேதி வங்காளதேசத்தையும், மார்ச் 2-ந்தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி ஆட்டங்கள் நடைபெற லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டி ஆகிய மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மைதானங்களில் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை கடந்த ஆகஸ்டு மாதம் பாகிஸ்தான் தொடங்கியது. புதுப்பிப்பு பணிகளை முடித்து பிப்ரவரி 12-ந்தேதிக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) ஒப்படைக்க வேண்டும்.

ஆனால் லாகூர் மற்றும் கராச்சியில் இன்னும் பெரிய அளவில் கட்டுமான பணிகள் எஞ்சியுள்ளன. இதனால் ஐ.சி.சி. விதித்த காலக்கெடுவுக்குள் பாகிஸ்தான் மைதானங்களை தயார் செய்து விடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை காலக்கெடுவுக்குள் மைதான பணிகள் முடிக்கப்படாவிட்டால் போட்டி முழுமையாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்