இந்தியாவால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியுமா..? - கவாஸ்கர் கணிப்பு
|நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியின் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
மும்பை,
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்திய அணி சில புள்ளிகளை இழந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பினஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை இழந்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி (62.50 சதவீத புள்ளி) முதலிடத்துக்கு முன்னேறியது. இலங்கை (55.56) 3-வது இடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து (54.55) ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா (54.17) 5-வது இடத்துக்கு இறங்கியது. முதல் 5 இடங்களில் இருக்கும் அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ரேசில் உள்ளன.
இதனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்திய அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேற சிக்கல் எழுந்துள்ளது. இந்திய அணி அடுத்ததாக நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் 4-1 (5 போட்டிகள்) என்ற கணக்கில் வெற்றி பெறும் பட்சத்தில் எந்த வித சிக்கலுமின்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மாறாக இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றினால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிவரும். ஆனால் இரண்டிற்கு மேற்பட்ட போட்டிகளில் தோல்வியை தழுவினால் நிச்சயம் வெளியேற நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது கடினம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 4-0 என வெற்றி பெற முடியாது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் அதைச் செய்தால் நான் நிலவிற்கு மேல் இருப்பதை போல் உணர்வேன். ஆனால் 4-0? இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெறலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பற்றி நான் பேச விரும்பவில்லை. இப்போது ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்லும் முயற்சியில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் 1-0, 2-0, 3-0, 3-1, 2-1 என வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. ஆனால் சென்று வெற்றி பெறுங்கள். ஏனென்றால், அப்போதுதான் மீண்டும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவார்கள்" என்று கூறினார்.