பும்ரா அதனை துரத்தக்கூடாது - பாக்.முன்னாள் வீரர் அட்வைஸ்
|பவுலர்களுக்கு கேப்டன்ஷிப் மறுக்கப்படுவதாக பும்ரா ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
லாகூர்,
இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா தற்சமயம் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார். வித்தியாசமான பவுலிங் ஆக்சன் வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வரும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக டி20 உலகக்கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
முன்னதாக வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தை சந்திப்பது வழக்கமான ஒன்றாகும். அதனால் பெரும்பாலான நாடுகளில் அவர்களுக்கு கேப்டன்ஷிப் பொறுப்பை வழங்க மாட்டார்கள். இருப்பினும் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எடுத்து வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் பவுலர்கள் மிகவும் சாதுரியமானவர்கள் என்று சமீபத்தில் பும்ரா கூறியிருந்தார். ஆனாலும் பெரும்பாலும் பவுலர்களுக்கு கேப்டன்ஷிப் மறுக்கப்படுவதாக அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அத்துடன் கபில் தேவ், இம்ரான் கான், பேட் கம்மின்ஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் சிறந்த கேப்டனாக செயல்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். எனவே தாமாக சென்று எனக்கு கேப்டன்ஷிப் கொடுங்கள் என்று கேட்க முடியாது என்றும் பும்ரா கூறியிருந்தார்.
இந்நிலையில் பும்ரா கேப்டன்ஷிப் பொறுப்பை துரத்தக்கூடாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-"பாபர் அசாம் கேப்டன்ஷிப் போல ஜஸ்ப்ரித் பும்ராவின் கருத்து இருந்தது. என்னுடைய கருத்துப்படி அவர் கேப்டன்ஷிப்பை சேசிங் செய்யக்கூடாது. சிறந்த வீரரான அவர் தன்னுடைய பந்து வீச்சில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். கபில் தேவ், இம்ரான் கான் ஆகியோரை பும்ரா எடுத்துக்காட்டாக கூறியிருந்தார்.
இருப்பினும் அவர்கள் ஆல் ரவுண்டர்கள் என்பதாலேயே வெற்றிகரமான கேப்டன்களாக செயல்பட்டனர். ஆல் ரவுண்டர்களுக்கும் பவுலர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பேட் கம்மின்ஸ் பற்றியும் அவர் பேசியிருந்தார். ஆம் கம்மின்ஸ் நல்ல கேப்டன். அவரைப் போன்ற சில வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல பயிற்சியாளர் அல்லது கேப்டனாக வருவார்கள். எனவே பும்ராவும் சாம்பியன்ஸ் டிராபிக்குப் பின் கேப்டனாக வருவதற்கு வாய்ப்புள்ளது. அதற்காக அவருக்கு என்னுடைய சிறந்த வாழ்த்துகள்" என்று கூறினார்.