பும்ரா டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக வேண்டும் - பாக். முன்னாள் வீரர்
|பும்ரா டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக வேண்டும் என சோயப் அக்தர் மறைமுகமாக கூறியுள்ளார்.
கராச்சி,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற பும்ராவின் பந்துவீச்சு மிக முக்கிய காரணமாக அமைந்தது. பும்ரா தற்போது வரை 43 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 185 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். இந்நிலையில், பும்ரா டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக வேண்டும் என பாகிஸ்தன் முன்னாள் வீரர் சோயப் அக்தர் மறைமுகமாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில், நீண்ட நேரம் பந்து வீச வேண்டும். பேட்ஸ்மேன்கள் உங்களைத் தாக்க முயற்சிப்பதில்லை. எனவே, லென்த் மட்டுமே போதாது. பந்து சீம் ஆகவில்லை என்றால் நீங்கள் விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறுவீர்கள். நீங்கள் தடுமாறத் தொடங்கியதும், அணி நிர்வாகம் கேள்வி கேட்கத் தொடங்கும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்களை வீழ்த்தும் அளவுக்கு அவர் போதுமான நல்ல வேகப்பந்து வீச்சாளர் என்று நான் நினைக்கிறேன். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் அதிக விக்கெட் வீழ்த்தவில்லை. சில சமயம் அது போல நடக்கும். ஆனால், பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டைத் தொடர விரும்பினால், அவர் தனது பந்து வீசும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். வேகத்தை அதிகரிக்கும் முயற்சியால், அவருக்கு காயம் ஏற்படும் அபாயம் அதிகம்.
நான் ஜஸ்ப்ரீத் பும்ராவாக இருந்தால், குறைந்த ஓவர் போட்டிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பேன். குறுகிய வடிவ போட்டிகளில் பும்ரா மிகவும் நல்ல வேகப்பந்து வீச்சாளர். அவர் லைன் மற்றும் லென்தைப் புரிந்துகொள்கிறார். அவரது துல்லியம் அற்புதமானது. டெத் ஓவர்களில், பவர் பிளே-வில் அவர் சிறப்பாக செயல்படுகிறார் என்று நான் நினைக்கிறேன். அவரால் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.