< Back
கிரிக்கெட்
பும்ரா, கம்மின்ஸ் இல்லை... அவர்தான் அற்புதமான பந்துவீச்சாளர் - நாதன் லயன் பாராட்டு
கிரிக்கெட்

பும்ரா, கம்மின்ஸ் இல்லை... அவர்தான் அற்புதமான பந்துவீச்சாளர் - நாதன் லயன் பாராட்டு

தினத்தந்தி
|
18 Nov 2024 7:40 PM IST

தம்முடைய கெரியர் முழுவதும் அஸ்வினுடன் போட்டியிடுவதாக நாதன் லயன் கூறியுள்ளார்.

பெர்த்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்த இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் தம்முடைய கேரியர் முழுவதும் போட்டியிடுவதாக நாதன் லயன் கூறியுள்ளார். அதே சமயம் அஸ்வினை பார்த்து தாமும் தம்முடைய கேரியரில் நிறைய கற்றுக் கொண்டுள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "அஸ்வின் அற்புதமான பந்துவீச்சாளர். அடிப்படையில் அவருக்கு எதிராக நான் நேருக்கு நேராக என்னுடைய கெரியர் முழுவதும் விளையாடியுள்ளேன். அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுள்ளேன். மிகவும் சாதுரியமான பவுலரான அவர் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தன்னை வேகமாக உட்படுத்திக் கொள்வார். அதை உலகில் சிறப்பாக செய்யக்கூடிய பவுலர்களில் அவர் ஒருவர் என்று நினைக்கிறேன். அவர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளார்.

பொதுவாகவே உங்களுக்கு எதிராக விளையாடும் சிறந்த வீரர்களே உங்களுடைய சிறந்த பயிற்சியாளர்களாக இருப்பார்கள் என்று நான் நம்புபவன். இந்தியாவுக்கு செல்லும் முன் அஸ்வின் வீசிய போட்டிகளை நான் நிறைய பார்த்து விட்டு சென்றேன். அதே போல ஆஸ்திரேலியாவில் அவர் பந்து வீசிய ஆட்டங்களையும் பார்த்து ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா என்பதைப் பார்க்கிறேன்.

நான் கொடுக்கும் பேட்டிகளை ரவீந்திர ஜடேஜா படிப்பார் என்பதால் இந்தத் தொடரில் என்னுடைய திட்டங்கள் என்ன என்பது பற்றி என்னால் சொல்ல முடியாது. இருப்பினும் ஆஸ்திரேலியாவில் பந்தின் பின்பகுதியை அதிகமாக சுழற்றி பவுன்ஸை ஏற்படுத்தவே நான் அதிகமாக முயற்சிப்பேன். ஆனால் ஆஸ்திரேலியாவில் அதை பெறுவது மிகவும் கடினம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்