< Back
கிரிக்கெட்
கோப்பை கிடைக்க பும்ரா மட்டுமல்ல….இவரும் காரணம் - பாக். முன்னாள் கேப்டன்
கிரிக்கெட்

கோப்பை கிடைக்க பும்ரா மட்டுமல்ல….இவரும் காரணம் - பாக். முன்னாள் கேப்டன்

தினத்தந்தி
|
12 July 2024 10:58 AM IST

ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

லாகூர்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.

அந்தத் தொடரில் பும்ரா இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை வென்று அசத்தினார். நிறைய போட்டிகளில் தேவைப்பட்ட நேரங்களில் விக்கெட்டுகளை எடுத்த அவர் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

அதேபோல இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும் பும்ராவுக்கு நிகராக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இந்த தொடரில் 17 விக்கெட்டுகள் வீழ்த்திய டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பவுலர் என்ற சாதனையை பரூக்கியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஒருபுறம் பும்ரா அபாரமாக செயல்பட்டாலும் மறுபுறம் அதற்கு சமமாக அர்ஷ்தீப் பந்து வீசாமல் போயிருந்தால் இந்தியா தோல்வியை சந்தித்திருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். அதே சமயம் பும்ராவுடன் இணைந்து விளையாடும்போது நன்றாக முன்னேற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த வெற்றியில் அனைத்து இந்திய பவுலர்களும் முக்கிய பங்காற்றினர். சில நேரங்களில் அடி வாங்கினாலும் பிளாட்டான பிட்ச்களில் அவர்கள் நெருக்கமான லைனை வீசி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். அதுவே உங்களுடைய தரம் மற்றும் திறமையை சோதிக்கும். அப்படி பார்க்கும்போது அர்ஷ்தீப் பெயர் முதலாவதாக வரும். பும்ராவிடம் அவரால் கற்றுக்கொள்ள முடியும். பும்ரா இருப்பதால் அழுத்தத்தை உணர முடியாது. அதே சமயம் பும்ரா அளவுக்கு இல்லையென்றாலும் அதற்கு சமமான செயல்பாடுகளை அவர் வெளிப்படுத்தியாக வேண்டும்.

அந்த வகையில் தமக்குத்தாமே சவால் விடுவது அர்ஷ்தீப்புக்கு மிகவும் முக்கியமாகும். பெரும்பாலான நேரங்களில் வாழ்வா - சாவா சூழ்நிலையில் பந்து வீசினார். ஒருவேளை அங்கே அவர் சிறப்பாக பந்து வீசாமல் போயிருந்தால் இந்தியா தோல்வியை சந்தித்திருக்கும். ஆனால் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்ட அவர் தன்னுடைய அணிக்கு நிறைய சாதகத்தை ஏற்படுத்துகிறார். எனவே இந்தியா கோப்பையை வெல்ல அவரும் முக்கிய காரணம். இந்திய அணியில் கடந்த 6 மாதங்களில் திறமையில் முன்னேற்றங்கள் ஏற்படுவதை நாம் பார்த்து வருகிறோம். அவர்களின் திறமை உயர்ந்தாலும் இன்னும் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். அதையே நீங்கள் அர்ஷ்தீப் பந்து வீச்சில் பார்க்கும் முக்கிய அம்சமாகும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்