பும்ராவுக்கு அது வேண்டாம் - தினேஷ் கார்த்திக் அட்வைஸ்
|இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா கோஹினூர் வைரத்தைபோல மிகவும் மதிப்புமிக்கவர் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா தற்சமயம் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார். வித்தியாசமான பவுலிங் ஆக்சன் வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வரும் அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக டி20 உலகக்கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
முன்னதாக வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தை சந்திப்பது வழக்கமான ஒன்றாகும். அதனால் பெரும்பாலான நாடுகளில் அவர்களுக்கு கேப்டன்ஷிப் பொறுப்பை வழங்க மாட்டார்கள். இருப்பினும் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எடுத்து வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் பவுலர்கள் மிகவும் சாதுரியமானவர்கள் என்று சமீபத்தில் பும்ரா கூறியிருந்தார். ஆனாலும் பெரும்பாலும் பவுலர்களுக்கு கேப்டன்ஷிப் மறுக்கப்படுவதாக அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அத்துடன் கபில் தேவ், இம்ரான் கான், பேட் கம்மின்ஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் சிறந்த கேப்டனாக செயல்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். எனவே தாமாக சென்று எனக்கு கேப்டன்ஷிப் கொடுங்கள் என்று கேட்க முடியாது என்றும் பும்ரா கூறியிருந்தார்.
இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா கோஹினூர் வைரத்தைபோல மிகவும் மதிப்புமிக்கவர் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். எனவே அவர் கேப்டன்ஷிப் பொறுப்பு இல்லாமல் சுதந்திரமாக விளையாடுவதே நல்லது என்றும் தினேஷ் கார்த்திக் ஆலோசனை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அனைத்தும் சரியாக இருக்கிறது. மிகவும் அமைதியான பொறுமையான பும்ரா நல்ல முதிர்ச்சியை கொண்டுள்ளார். இருப்பினும் வேகப்பந்து வீச்சாளரான அவரை எப்படி 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாட வைக்க முடியும் என்பதே தேர்வாளர்களின் மனதில் இருக்கும் பெரிய கேள்வியாகும். பும்ரா போன்ற வேகப்பந்து வீச்சாளரின் பிட்னஸ் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். அவரைப் போன்ற வீரர் முக்கியமான போட்டிகளில் மட்டுமே விளையாடுவதற்காக பாதுகாக்கப்பட வேண்டும்.
பும்ரா கோஹினூர் வைரத்தைப் போன்றவர் என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். எனவே நாம் அவரை பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் எந்த வகையான கிரிக்கெட்டில் விளையாடினாலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்துவார். அதுதான் நமக்கு வேண்டும். ஆனால் கேப்டன்ஷிப் பொறுப்பால் ஏற்படும் பாரம் மற்றும் அழுத்தத்தால் அவர் காயத்தை சந்திக்கக்கூடும்.எனவே அவருக்கு அது வேண்டாம்" என்று கூறினார்.