< Back
கிரிக்கெட்
இந்திய டெஸ்ட் வரலாற்றில் மாபெரும் உலக சாதனை படைத்த பும்ரா
கிரிக்கெட்

இந்திய டெஸ்ட் வரலாற்றில் மாபெரும் உலக சாதனை படைத்த பும்ரா

தினத்தந்தி
|
19 Dec 2024 5:15 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின்போது பும்ரா இந்த சாதனையை படைத்துள்ளார்.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தன.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டி முழுவதும் மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டது.

இத்தகைய மழை பாதிப்புக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களும், ஸ்டீவ் சுமித் 101 ரன்களும் குவித்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்டுகள் அள்ளினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 78.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 84 ரன்களும், ஜடேஜா 77 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 185 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 18 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதன் மூலம் இந்தியாவுக்கு 275 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 2.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 8 ரன் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல் தலா 4 ரன்னுடன் களத்தில் இருந்தனர். தொடர்ந்து கனமழை கொட்டியதால் மேற்கொண்டு ஆட்டத்தை தொடர முடியவில்லை. இதனால் இந்த டெஸ்ட் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இந்த போட்டியில் கைப்பற்றிய 9 விக்கெட்டுகளையும் (2 இன்னிங்ஸ்களிலும்) சேர்த்து இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் 53 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு வெளிநாட்டில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளார் என்ற மாபெரும் உலக சாதனையை பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன்னர் கபில் தேவ் (ஆஸ்திரேலியாவிலும்) மற்றும் இஷாந்த் சர்மா (இங்கிலாந்திலும்) தலா 51 விக்கெட்டுகள் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள பும்ரா 53 விக்கெட்டுகளுடன் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்

1. பும்ரா - ஆஸ்திரேலியா - 53 விக்கெட்டுகள்

2. கபில் தேவ் - ஆஸ்திரேலியா - 51 விக்கெட்டுகள்

2. இஷாந்த் சர்மா - இங்கிலாந்து - 51 விக்கெட்டுகள்

3. அனில் கும்ப்ளே - ஆஸ்திரேலியா - 49 விக்கெட்டுகள்

4. முகமது ஷமி - இங்கிலாந்து - 42 விக்கெட்டுகள்

மேலும் செய்திகள்