பிரிஸ்பேன் டெஸ்ட்: டிராவிற்குப்பின் இந்திய அணியின் கேப்டன் கூறியது என்ன..?
|இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தன.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா ஸ்டேடியத்தில் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதல் நாள் முதலே அவ்வப்போது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
இத்தகைய மழை பாதிப்புக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களும், ஸ்டீவ் சுமித் 101 ரன்களும் குவித்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்டுகள் அள்ளினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 78.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 84 ரன்களும், ஜடேஜா 77 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 185 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்க தயாரானபோது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் தொடங்கிய இந்த இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை தாரை வார்த்தது. 18 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன் மூலம் இந்தியாவுக்கு 275 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 2.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 8 ரன் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல் தலா 4 ரன்னுடன் களத்தில் இருந்தனர். தொடர்ந்து கனமழை கொட்டியதால் மேற்கொண்டு ஆட்டத்தை தொடர முடியவில்லை. இதனால் இந்த டெஸ்ட் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நீடிக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டி முடிவில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், "இது போன்று அடிக்கடி மழையால் தடைபடுவது போட்டிக்கு சிறந்தது கிடையாது. அதற்கு இந்த முடிவே மகிழ்ச்சிதான். 1-1 என்ற சமநிலையுடன் மெல்போர்ன் டெஸ்டுக்கு (4-வது போட்டி) செல்வது மிகுந்த நம்பிக்கையை தரும். இந்த போட்டியை பொறுத்தவரை அணியை பாலோ-ஆன் ஆபத்தில் இருந்து காப்பாற்ற 4-வது நாளில் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு யாராவது ஒருவர் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமாக இருந்தது.
ஏனெனில் மோசமான வானிலையால் ஆட்டம் முழுமையாக நடைபெறாது என்பது தெரியும். அந்த வகையில் ஜடேஜா, ராகுல் விளையாடிய விதத்தை பாராட்டியாக வேண்டும். இதே போல் ஆகாஷ் தீப், பும்ராவின் போராட்டத்தை பார்க்க நன்றாக இருந்தது. அவர்கள் இருவரும் பேட்டிங் பயிற்சியும் கடினமாக எடுக்கிறார்கள். பாலோ-ஆனை தவிர்த்ததே எங்களுக்கு சிறிய வெற்றிதான்' என்று கூறினார்.