< Back
கிரிக்கெட்
பிரிஸ்பேன் டெஸ்ட்; பாலோ ஆனை தவிர்த்த இந்தியா...4ம் நாள் முடிவில் 252/9

Image Courtesy: AFP

கிரிக்கெட்

பிரிஸ்பேன் டெஸ்ட்; பாலோ ஆனை தவிர்த்த இந்தியா...4ம் நாள் முடிவில் 252/9

தினத்தந்தி
|
17 Dec 2024 2:05 PM IST

இந்தியா தரப்பில் பும்ரா 10 ரன்னுடனும், ஆகாஷ் தீப் 27 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

பிரிஸ்பேன்,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 117.1 ஓவர்களில் 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 151 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், அடுத்து வந்த கில் 1 ரன்னிலும், விராட் கோலி 3 ரன்னிலும், ரிஷப் பண்ட் 9 ரன்னிலும்,அவுட் ஆகினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் ராகுல் 33 ரன்னுடனும், ரோகித் ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் ரோகித் 10 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ராகுலுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் 84 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் இறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி 16 ரன்னிலும், முகமது சிராஜ் 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து ஜடேஜா உடன் பும்ரா ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜடேஜா அரைசதம் அடித்த நிலையில் 77 ரன்னில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 213 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. 246 ரன் எடுத்தால் பாலோ ஆனை தவிர்க்கலாம் என்ற நிலையில் பும்ரா உடன் ஆகாஷ் தீப் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது.

இறுதியில் 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்து பாலோ ஆனை தவிர்த்தது. இந்தியா தரப்பில் பும்ரா 10 ரன்னுடனும், ஆகாஷ் தீப் 27 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 193 ரன்கள் பின்னிலையில் உள்ளது. நாளை 5ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இன்னும் ஒரு நாளே எஞ்சி உள்ளதால் இந்த ஆட்டம் டிராவில் முடிவது உறுதியாகிவிட்டது.

மேலும் செய்திகள்