< Back
கிரிக்கெட்
பிரிஸ்பேன் டெஸ்ட்; ஹெட், ஸ்மித் சதம்...2ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 405/7

Image Courtesy: AFP

கிரிக்கெட்

பிரிஸ்பேன் டெஸ்ட்; ஹெட், ஸ்மித் சதம்...2ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 405/7

தினத்தந்தி
|
15 Dec 2024 2:41 PM IST

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 152 ரன், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன் எடுத்தனர்.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது.

இதில் நேற்று மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 19 ரன்களுடனும், மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர் . இந்த நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் மெக்ஸ்வீனி 9 ரன்னிலும், கவாஜா 21 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய லபுசேன் 12 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இந்த இணையை பிரிக்க முடியாமல் இந்திய அணியினர் திணறினர்.

மறுபுறம் நிதானமாக ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இதில் ஸ்மித் 101 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 152 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் புகுந்த மிட்செல் மார்ஷ் 5 ரன், கம்மின்ஸ் 20 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து அலெக்ஸ் கேரி மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஜோடி சேர்ந்தனர். இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டனர்.

இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டை இழந்து 405 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் அலெக்ஸ் கேரி 45 ரன்னுடனும், ஸ்டார்க் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்