பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவுக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
|இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பிரிஸ்பேன்,
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 117.1 ஓவர்களில் 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 151 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா தரப்பில் பும்ரா 10 ரன்னுடனும், ஆகாஷ் தீப் 27 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இந்தியா 193 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் இன்று 5ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று பேட்டிங்கை தொடங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 260 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 7 விக்கெட்டை இழந்து 89 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 22 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலையுடன் இந்தியாவுக்கு 275 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் இன்னும் 54 ஓவர்கள் வீச வாய்ப்பு உள்ளதால் இரு அணிகளும் வெற்றிக்காக போராடும். தொடர்ந்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் களம் இறங்கி ஆடி வருகின்றனர்.