< Back
கிரிக்கெட்
பாக்சிங் டே டெஸ்ட்: இந்தியாவின் தோல்விக்கான காரணம் என்ன..? ரோகித் சர்மா விளக்கம்
கிரிக்கெட்

பாக்சிங் டே டெஸ்ட்: இந்தியாவின் தோல்விக்கான காரணம் என்ன..? ரோகித் சர்மா விளக்கம்

தினத்தந்தி
|
30 Dec 2024 5:30 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கியதால் இந்த டெஸ்ட் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்பட்டது.

இதில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது.

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 474 ரன்களும், இந்தியா 369 ரன்களும் அடித்தன. இதனையடுத்து 105 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதனால் இந்தியாவுக்கு 340 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி வெறும் 155 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், "உண்மையிலேயே இந்த தோல்வி எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. நாங்கள் இந்த போட்டியில் போராடும் அளவிற்கு விளையாடவில்லை என்று நினைக்கிறேன். இறுதிவரை போராட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் இந்த போட்டியில் அது முடியாமல் போனது.

உண்மையிலேயே கடைசி செஷனை அணுக கடினமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில் நாங்கள் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டதால் தோல்வியை சந்தித்துள்ளோம். ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் மிகச்சிறப்பாக மீண்டு வந்தது. நான் என் அறைக்கு திரும்பி இந்த தோல்வி குறித்து நிறைய யோசித்தேன்.

ஒரு அணியாக நாம் வேறு என்ன செய்திருக்க முடியும். எங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தோம். ஒரு அணியாக நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். இந்த போட்டியில் எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தும் அதனை பிடிக்க தவறிவிட்டோம். அதுவே எங்களுக்கு தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்