பாக்சிங் டே டெஸ்ட்: சாம் கான்ஸ்டாஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலி.. என்ன நடந்தது..?
|இந்தியா - ஆஸ்திரேலியா 4-வது டெஸ்ட் இன்று தொடங்கியது.
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்ட் மழையின் பாதிப்பால் 'டிரா' ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுகிறது.
அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக உஸ்மான் கவாஜா - சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினர்.
இவர்களில் கவாஜா நிதானமான ஆட்டத்திய வெளிப்படுத்திய வேளையில் மறுமுனையில் அறிமுக வீரரான கான்ஸ்டாஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பும்ராவின் பந்துவீச்சை சர்வ சாதாரணமாக எதிர்கொண்ட அவர் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
தற்போது வரை ஆஸ்திரேலியா 37 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 137 ரன்கள் அடித்துள்ளது. கவாஜா 51 ரன்களுடனும், லபுஸ்சேன் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக இந்த ஆட்டத்தின் 10-வது ஓவரின் இடையே விராட் கோலி - சாம் கான்ஸ்டாஸ் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
10-வது ஓவர் முடிவடைந்த நிலையில் விராட் கோலி மைதானத்தில் செல்லும்போது எதிர்பாராத விதமாக சாம் கான்ஸ்டாஸின் தோளில் மோதினார். இதனால் இருவருக்கிமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கவாஜா மற்றும் நடுவர்கள் வந்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.